மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு-வானதி சீனிவாசன் கடும் தாக்கு
1 min readReservation for converted Christians- Vanathi Srinivasan hits out
19.4.2023
மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இடஒதுக்கீடு
பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது வானதி சீனிவாசன் பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “சட்டப்பேரவையில் அரசினருடைய தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் தாக்கல் செய்தார். கிறிஸ்தவம், இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே பட்டியலினத்தவர் அனுபவித்து வரும் இட ஒதுக்கீடு பலனைக் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் நாங்கள் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறோம். இம்மாதிரியான மதம் மாறிய பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்துடைய இட ஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்காக மத்தியிலேயே உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.
அடுத்ததாக, மதம் மாறியதற்காக சலுகைகள் வழங்காதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்களுக்கு இந்த உரிமை கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுளது. அதன் மீதும் விசாரணை நடந்து வருகிறது. அடுத்த விசாரணை ஜூலையில் நடைபெறவுள்ளது. அப்படியிருக்க, நீதிமன்ற வரம்பில் இருக்கும் விஷயத்தைப் பற்றி எதற்காக இந்தத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கேள்வியை பாஜக முன்வைக்கிறது.
கேள்வி
கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்துக்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை நடைபெற்று வருகிறது என்பதை இந்தத் தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்பதை நாங்கள் முதல்வரிடம் கேள்வியாக எழுப்பினோம்.
அதுமட்டுமல்லாமல் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்கின்ற திமுக அரசு வேங்கைவயல் பிரச்சினை, பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக பாஜக கருதுகிறது. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
மாநில அரசின் வரம்பில் உள்ள மயானம், ஆணவக் கொலைகள் தடுப்பு, பஞ்சமி நிலம் மீட்பு ஆகிய பிரச்சினைகளில் கூட அந்த மக்களை ஏமாற்றிவிட்டு, அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது அரசியல் நோக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.