May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரன் பற்றிய கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில்

1 min read

M.K.Stal’s response to a question about PDR Palanivel Thyagaran

2.5.2023
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகரன் பற்றிய கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

கேள்வி பதில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களில் ஒருவன்” கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சட்டமன்றக் கூட்டத் தொடர்-கள ஆய்வு என்று ஒரு மாதத்திற்கும் மேல் உங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்கின்ற இந்த ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சிக்கு ஒரு சிறிய இடைவெளி விழுந்து விட்டது! இடைவெளி என்பது நிகழ்ச்சிக்குத் தானே தவிர, உங்களுக்கும் எனக்கும் இல்லையே! அதனால்தான் கொஞ்சம் நேரம் கிடைத்தவுடனேயே உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வந்துவிட்டேன். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்னால் முதலில் என்னுடைய நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு ஆக போகிறது. அதற்குத்தான்!

  • மகளிருக்கு இலவசப் பேருந்து,
  • பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம்,
  • அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம்,
  • தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் நான் முதல்வன் திட்டம்-என, இவ்வாறு எண்ணற்ற முன்னோடி மக்கள் நலத் திட்டங்களைச் செய்து காட்டியிருக்கிறோம். இந்த வேகம் கொஞ்சமும் குறையாமல், இன்னும் வேகத்துடன் இதுபோன்ற திட்டங்கள் தொடரும்.
    நம்பர் 1 தமிழ்நாடு என்ற நம்முடைய இலக்கை நோக்கி செல்வோம். கேள்வி:- கவர்னர்கள் சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் சட்டமன்றத் தீர்மானம் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறதே. உச்சநீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறதே?
    பதில்:-உண்மைதான். இந்தியா முழுமைக்குமானதுதான் தமிழ்நாட்டுடைய குரல்! அதேபோலத்தான், மாநில சுயாட்சி உரிமைகளுக்கும் தமிழ்நாடுதான் தலைநகர்! அந்த அடிப்படையில்தான் இது மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். கோடிக்கணக்கான மக்களுடைய பிரதிநிதிகள் சேர்ந்து நிறைவேற்றி அனுப்புகின்ற சட்ட மசோதாக்களை, ஒரு நியமன ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றால், அதைவிட மக்களாட்சி மாண்புக்கு இழுக்கு இருக்க முடியாது. இதையும் படியுங்கள்: வீடுகளை சூழ்ந்துள்ள மழை தண்ணீரால் வெள்ளத்தில் மிதக்கும் புளியஞ்சோலை- 20 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின அதனால்தான், சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக என்னுடைய குரலுக்கு வலுசேர்த்த மாநில முதல்-அமைச்சர்களுக்கு நன்றி! அதேபோல, இன்னும் இருக்கின்ற மற்ற மாநில முதல்-அமைச்சர்களும் இதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன்

கேள்வி:- நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பதில்:- இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்து விட்டார். மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மேலும் இதைப் பற்றி பேசி, மட்டமான அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு நான் விளம்பரம் தேடித் தர விரும்பவில்லை.

கேள்வி:- கலைஞர் நூற்றாண்டு வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கிறதே. அதை எப்படிக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? பதில்:-‘மறந்தால் அல்லவா நினைப்பதற்கு!’-என்று சொல்வார்கள். நமது நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத் தலைவர் கலைஞரை மக்கள் நாள்தோறும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்! வருகின்ற ஜூன் 3 அன்று அவருடைய நூற்றாண்டு தொடங்கப்போகிறது! இந்த விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கிற மாதிரி கொண்டாட இருக்கிறோம். ஓராண்டு காலம் முழுவதும் தலைவர் கலைஞரின் சாதனைகளை நினைவுபடுத்தி, நன்றி செலுத்தும் ஆண்டாக இருக்கப்போகிறது. ஜூன் 5-ம் நாள், இந்த நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதற்காக குடியரசுத் தலைவரை டெல்லி சென்று சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்தச் சந்திப்பில், தலைவர் கலைஞர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் குடியரசுத் தலைவர் வைத்துள்ள மதிப்பையும் மரியாதையும் நான் அறிந்தேன். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் அவர். இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் அவர். விளிம்பு நிலை மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் அரசியல் ஆளுமைகளாக வரவேண்டும் என நினைத்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைப்பது மிகமிகச் சிறப்பானது! சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அதன்பிறகும் மக்களுக்கு பயனளிக்கும் தலைவராக கலைஞர் விளங்கி வருகிறார் என்பதை சொல்லத்தக்க வகையில் பயனுள்ள விழாக்களாக இவை அனைத்தும் அமையும்!
கேள்வி:- கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சியினர், செயற்பாட்டாளர்கள் இவர்களுடைய கருத்துக்கு மதிப்பளித்து தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை நிறுத்தி வைத்தீர்கள். இது உங்கள் ஜனநாயகப் போக்கையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது. ஆனால் இதை பலவீனமாக ஒருதரப்பினர் கட்டமைக்க முயல்கிறார்களே?
பதில்:-“மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களின் மனச்சாட்சியே நீதிபதி”-என்று தலைவர் கலைஞர் சொல்வார். அப்படித்தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி! அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது. பலத்தை வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்படவுமில்லை. பலவீனமாக இதனை வாபஸ் பெறவுமில்லை.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.