தென்காசி அருகே ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.40 ஆயிரம் எடுத்த பெண் கைது
1 min read
Woman arrested for stealing Rs 40,000 from ATM card near Tenkasi.
4.5.2923
தென்காசி அருகே ஏடிஎம் கார்டை திருடி அதன் மூலம் ரூபாய் 40 ஆயிரத்தை எடுத்த கோவை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரூ.40 ஆயிரம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சார்ந்தவர் முருகேஸ்வரி (வயது 33) இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடையநல்லூர் அரசு பஸ்ஸில் சென்றுள்ளார். பின்னர் அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறி வீட்டுக்கு வந்து விட்டார்.
வீட்டிற்கு வந்தபின் அவரது செல்போனுக்கு வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் நாற்பதாயிரம் எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்ததும் முருகேஸ்வரி தனது பையைத் திறந்து பார்த்தபோது பையில் இருந்த மணி பர்சையும் அந்த மணிபர்சில் ரூபாய் 1000 ரொக்கம், மற்றும் ஏடிஎம் கார்டையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
பெண்
உடனடியாக முருகேஸ்வரி இது பற்றி கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் முருகேஸ்வரிக்கு வந்த செல்போன் மெசேஜை பார்த்து அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் பணம் எடுக்கப்பட்டதை அறிந்து அந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.மேலும் முருகேஸ்வரி அந்த ஏடிஎம் கார்டில் தனது ரகசிய குறியீட்டு எண்ணையும் எழுதி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அப்போது முருகேஸ்வரியின் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை திருடிய பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்தப் பெண்ணின் உருவப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அந்தப் பெண் கோவை தெற்கு மதுக்கரை அண்ணா சதுக்கம் அறிவியல் நகரச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மனைவி பழனியம்மாள் வயது 55 என்பது தெரியவந்தது உடனடியாக கோவைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வீட்டில் இருந்த பழனியம்மாளை கைது செய்து கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பழனியம்மாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.