பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட 8 மாநில முதல் மந்திரிகள் புறக்கணிப்பு
1 min readThe Chief Ministers of 8 states, including Tamil Nadu, boycotted the Niti Aayog meeting chaired by the Prime Minister
27/5/2023
பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகம் உள்பட 8 மாநில முதல் மந்திரிகள் புறக்கணித்துள்ளனர்.
நிதி ஆயோக் கூட்டம்
மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைத்ததும் இந்தியாவில் ஏற்கனவே அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை நிதி ஆயோக் ஈடுபட்டு வருகிறது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
இந்த அமைப்பின் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் துணைநிலை ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இதன் ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற்றது.
புறக்கணிப்பு
இந்நிலையில், இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தர பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 8 மாநில முதல் மந்திரிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.