கர்நாடகத்தில் 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பு
1 min read24 people accepted as ministers in Karnataka
27.5.2023
கர்நாடகத்தில் மந்திரி சபை விஸ்தரிக்கப்பட்டு உள்ளது. 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
கர்நாடக மந்திரி சபை
கா்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த 20-ந் தேதி பதவி ஏற்றார். அவரு டன் டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியா கவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.
தொடர்ந்து கர்நாடக சட்டசபை கூட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 24-ந் தேதி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை சந்தித்து, மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர். சோனியா காந்தி, ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய 2 பேரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களில், 15 சதவீதம் பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கர்நாடகாவில் 224 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், 34 பேர் மந்திரி ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன. இதயடுத்து புதியதாக பதவி ஏற்க உள்ள 24 மந்திரிகளின் பெயர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று இரவு வெளியிட்டது.
பதவி ஏற்பு
இதை தொடர்ந்து கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிய மந்திரிகளாக தினேஷ் குண்டுராவ் (காந்திநகர் தொகுதி), ஈஸ்வர் கன்ட்ரே (பால்கி தொகுதி), லட்சுமி ஹெப்பால்கர் (பெலகாவி புறநகர்), சிவானந்த பட்டீல் (பசவனபாகேவாடி), சரணபசப்பா தர்சானபுரா (சகாப்புரா), எச்.சி.மகாதேவப்பா (டி.நரசிப்புரா), வெங்கடேஷ் (பிரியப்பட்டணா), எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் (தாவணகெரே), பைரதி சுரேஷ் (ஹெப்பால்), கிருஷ்ண பைரேகவுடா (பேட்ராயனபுரா), ரகீம்கான் (பீதர் வடக்கு), எம்.சி.சுதாகர் (சிந்தாமணி), டி.சுதாகர் (இரியூர்), எச்.கே.பட்டீல் (கதக்), செலுவராயசாமி (நாகமங்களா), கே.என்.ராஜண்ணா (மதுகிரி), சந்தோஷ் லாட் (கல்கட்டகி), மது பங்காரப்பா (சொரப்), மங்கல் வைத்யா (பட்கல்), சிவராஜ் தங்கடகி (கனககிரி), ஆர்.பி.திம்மாபுரா (முதோல்), சரண பிரகாஷ் பட்டீல் (சேடம்), என்.எஸ்.போசராஜூ (மான்வி), நாகேந்திரா (பல்லாரி புறநகர்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.