பிரதமர் மோடியிடம் செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம் ஒப்படைத்தார்
1 min readThiruvavaduthurai Atheenam handed over the scepter to Prime Minister Modi
27.5.2023
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே நிறுவப்படும் செங்கோலை திருவாவடுதுறை ஆதினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்.
செங்கோல்
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.
டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.
ஆதினம்
இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றடைந்தனர்.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.