4-வது நாளாக வருமானவரி சோதனை: தி.மு.க கவுன்சிலர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு
1 min read
Income tax probe for 4th day: 2 DMK councilors jailed
29.5.2023
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய சென்னை, கரூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இன்று 4 -வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்னர்.
சோதனை
தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக் குமார் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று 4-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சென்னை, கரூர், கோவை, ஈரோட்டில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் அதாவது, கடந்த 3 நாட்களாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வசித்து வரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பார்மெண்ட்டில் உள்ள வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள வீடு, கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வீடு, கரூர் துணை மேயர் தாரணி சரவணனின் ராயனூரில் உள்ள வீடு, கரூர் காந்திகிராமத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் எம்.சி.சங்கர் என்பவரின் அலுவலகத்தில் வேலை செய்து வரும் பெண் ஒருவர் வீடு மற்றும் பிரேம்குமார் என்பவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உதவியுடன் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுறது.
சச்சிதானந்தம்
அதேபோல, ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் என்பவரது வீட்டிலும் இன்று 4-வது நாளாக வருமானவரித்துறை சோதனை தொடர்கிறது. இவர் சுமார் 150 லாரிகள் வாங்கியதாகவும் அதனால், இவர் வருமான வரித்துறையினர் பிடியில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் பனப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினருக்கு சொந்தமான எம்.சாண்ட் நிறுவனம் மற்றும் பொள்ளாச்சி அருகே உள்ள எம்.சாண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்தது. ஆனால், கோவை திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவுன்சிலர்கள்
கரூரில் கடந்த 26 -ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றபோது, வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் லாரன்ஸ் மற்றும் 16 வது வார்டு கவுன்சிலர் பூபதி உள்ளிட்ட 15 பேரை சிறையில் அடைத்தனர்.