தோரணமலையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட பூஜை
1 min readPooja for students to excel in education at Thoranamalai
29.5.2023
தோரணமலை முருகன் கோவிலில் வரும் கல்வியாண்டில் மாணவ மாணவிகள் படிப்பில் சிறந்து விளங்கிட சரஸ்வதி கடாட்ச அனுக்கிரக பூஜை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீ தோரணமலை முருகன் கோவில். ஆனைமுக வடிவில் மலைக்குன்றில் அமைந்துள்ள தோரணமலை முருகன் ஆலயத்தில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்டதாகவும், மூலிகை ஆராய்ச்சி செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில் தைப்பூசம், முருகன் திருக்கல்யாணம், விவசாயம் செய்திட வேண்டிய சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்க இருப்பதால் வரும் கல்வி ஆண்டில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக இன்று இந்த ஆலயத்தில் சரஸ்வதி கடாட்ச அனுக்கிரக பூஜை நடத்தப்பட்டது. மலை மீது உள்ள குகையில் வீற்றிருக்கும் முருகரின் உற்சவ மூர்த்திகள் ஆலயத்தின் கீழ் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்திகளுக்கு மலை அடிவாரத்தில் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பள்ளி கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளின் கரங்களால் மலர்கள் தூவியும், நவதானியங்கள் படைத்தும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள்களுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது.
சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நவதானியங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.