திருப்பதியில் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை
1 min readStopping of vehicles on the mountain road in Tirupati is prohibited
31.5.2023
மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பி எடுக்கின்றனர். இதனாலும் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. எனவே திருப்பதியில் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி மலைப்பாதை
திருப்பதி மலைப்பாதையில் இந்த மாதம் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். மலைப்பாதையில் பழைய வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் விபத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.
விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா கூறியதாவது:-
மலைப்பாதையில் வாகனங்கள் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், விபத்துக்கள் நடக்கின்றன.
மேலும் செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவதும், வாகனங்களை வேகமாக ஓட்டுவதும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன. மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பி எடுக்கின்றனர். இதனாலும் விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
செல்பி எடுக்கத் தடை
மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி செல்பி எடுக்க தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாதை பற்றி தெரிந்த டிரைவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும். மலைப்பாதையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படும். விதிகளை மீறினால், அந்த வாகனங்களை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 75,871 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 32,859 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.27 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இன்று காலை நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.