பிபோர்ஜாய் புயல் வடக்கு நோக்கி நகர்கிறது- கேரளா முதல் மராட்டியம் வரை கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Cyclone Piborjai moving north- Heavy rain likely over Kerala to Maharashtra
7.6.2023
தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. பிபோர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் வடக்கு நோக்கி நகர்கிறது. இதனால் கேரளா முதல் மராட்டியம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தாமதமான நிலையில் இப்போது அரபிக்கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் என்று பெயரிடப்பட் டுள்ளது. இந்த பெயரை வங்கதேச மாநிலம் வழங்கி உள்ளது. பிபோர்ஜாய் என்றால் பேராபத்து என்று பொருள்.
தற்போது அரபிக்கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அதன்படி இந்த புயல் தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த புயல் கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபி கடலில் கோவாவுக்கு மேற்கு, தென்மேற்கே 920 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து தென்-தென் மேற்கே 1130 கிலோ மீட்டர் தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மழை
பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரம் அடைந்து கிழக்கு மத்திய அரபி கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்த புயலால் கேரளா முதல் மராட்டியம் வரையிலான அரபி கடல் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அப்போது அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.