குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளம்
1 min read
Flash floods at Courtalam main waterfall, Aindaruvi
19.6.2023
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அறவே விழவில்லை.
.
குற்றால சீசன்
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும். அப்போது இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றுருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்திலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் போதிய அளவு தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் புளியரையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த மிதமான மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஐந்தருவில் உள்ள 4 கிளைகளில் மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. இன்று காலையிலும் அதே நிலைதான் இருந்தது.
வெள்ளம்
இந்த நிலையில் இன்று பிற்பகல் தென்காசி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யது. இதனால் மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
அதே நேரம் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அறவே விழவில்லை.
நேற்று பெய்த திடீர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாகவும், தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை என்றால் தண்ணீர் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. தென்மேற்கு பருவ மழை பெய்தால்தான் குற்றால சீசன் களை கட்டும்.