June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பாஜக பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்துவிட்டது- பாட்னா கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு

1 min read

BJP has lost its influence in many states-Rahul Gandhi speech at Patna rally

24.3.2023-
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை இழந்துவிட்டது என்றும் அங்கெல்லாம் பாஜகவை காண முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவ சேனா(உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

சித்தாந்தபோர்

இந்தியாவில் தற்போது சித்தாந்த போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதற்கான சித்தாந்தத்துக்கும், ஒற்றுமையை சிதைக்கும் சித்தாந்தத்துக்கும் இடையே இந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பாஜக பரப்பிக் கொண்டிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்துகிறது. நாம் அன்பையும் ஒற்றுமையையும் பரப்புவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்றுகூடி இருக்கிறோம்.

செல்வாக்கு இழப்பு

இந்தக் கூட்டத்தில் உங்கள் மத்தியில் நான் சொல்கிறேன். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அந்தக் கட்சி செல்வாக்கை இழந்துவிட்டது. இந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஏனெனில், நாம் ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறோம். ஆனால், பாஜக 2-3 தொழிலதிபர்களின் நலனுக்காகப் பாடுபடுகிறது.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருகிறது. கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டது போல வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.