October 14, 2024

Seithi Saral

Tamil News Channel

மோடி தமிழ்பற்றி பேசிய காட்சி அமெரிக்காவில் வைரல்

1 min read

The video of Modi talking about Tamil went viral in America

25.6.2023
பிரதமர் மோடி தனது உரையில் தமிழைப் பற்றிப் பேசிய காட்சிப் பதிவு, அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மூத்த மொழி

உலகின் மூத்த மொழி தமிழ் என அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழுக்கான இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி முதலாக ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார். இதுவரை தனது இந்திய நிகழ்ச்சிகளில் மட்டும் இதைக் கூறிவந்த அவர், வெளிநாடுகளிலும் இதை பேசத் தொடங்கியுள்ளார்.

இந்தவகையில், சமீபத்தில் தனது அமெரிக்கப் பயண நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்ற பெருமை இந்தியர்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வாஷிங்டனில் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடுகையில், “இந்திய அரசின் உதவியுடன் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்காக ஓர் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இந்த இருக்கையால் தமிழ் கலாச்சாரம் மற்றும் உலகின் மூத்த மொழியான தமிழைப் பரப்புவதில் கூடுதலான பலன்கள் கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் எனது சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

மொழிகளை பற்றிய விவாதம் உங்கள் முன் எழும்போது, உலக மனித சமுதாயத்தின் முதல் மொழி தமிழ்தான் என்று அனைவரின் முன் நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள். அனைத்தையும் விடப் பழமையான மொழி தமிழ் மட்டுமே. அது எங்கள் மொழி ஆகும்” என தனது மார்பில் கையை தட்டி உற்சாகமாகத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது உரையில் தமிழைப் பற்றிப் பேசிய காட்சிப் பதிவு, அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட தமிழ் இருக்கைக்கான தேவை பல வருடங்களாக வலியுறுத்தப்படுகிறது.

இதன்மூலம், டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் வாழும் பல லட்சம் தமிழர்கள் பலனடைவார்கள். ஹூஸ்டன் தமிழர்கள் தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாக்கி தமிழ் இருக்கை அமைக்க முயற்சித்தனர்.

இவர்களுடன் அமெரிக்கத் தமிழர்களும் இணைந்துகொண்ட பின், உலகம் முழுவதிலும் இருந்தும் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு வந்தன. இதற்காக, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரூ.2.5 கோடி நன்கொடை அளித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கிடையே மத்திய அரசு சார்பில் இந்திய கலாச்சார உறவு கவுன்சில் (ஐசிசிஆர்) ஹூஸ்டனில் தமிழ் இருக்கையை தொடங்கும் பணியில் இறங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் சமீபத்தில் போடப்பட்டது.

இதையடுத்து பேராசிரியருக்கான விளம்பரம் அளித்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது. இதில், கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியரான டி.விஜயலட்சுமி வருகைதருப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கையுடன் சேர்த்து, வெளிநாடுகளில் ஐசிசிஆர் அமைப்பின் தமிழ் இருக்கை 3 ஆக உயருகிறது. ஏற்கெனவே, போலந்தில் இதன் சார்பில் இரண்டு தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.