அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை-மோடி அறிவிப்பு
1 min readTamil seat at University of Houston, USA – Modi announcement
24.6.2023
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி
3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 20ம் தேதி அன்று இந்தியாவிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இறுதி நாளான நேற்று அரசுமுறை நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு இறுதியாக, இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மோடி பேசியதாவது:-
இந்தியாவின் முழு வரைபடமே இங்கு இருப்பதை போன்று நான் கருதுகிறேன். நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்களை நான் இங்கு பார்க்கிறேன். இந்த கட்டடமே மினி இந்தியா போன்று மாறியிருப்பதை போல் தெரிகிறது. ’ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்’ போன்ற அழகான பிம்பத்தை அமெரிக்காவில் காட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் நான் பெறும் அன்பு அருமை, அனைத்தும் நாட்டு மக்களுக்கே உரித்தானது.
கடந்த 3 நாட்களில் அதிபர் பைடனும் நானும் நிறைய விவாதித்தோம். அவரை அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்று சொல்லலாம். பைடன் எப்போதும் இந்திய- அமெரிக்க கூட்டாண்மையை மற்றொரு நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார். இந்தியா மற்றும் அமெரிக்க உறவுகளின் புதிய மற்றும் புகழ்பெற்ற பயணம் தொடங்கியுள்ளது. இந்த புதிய பயணம் உலகளாவிய பிரச்னைகள், மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்டுக்கான எங்களது ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து உள்ளது.
ஹுஸ்டனில் தமிழ் இருக்கை
பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகங்கள் திறக்கப்படும். ஹெச்1பி விசா புதுப்பிப்பை அமெரிக்காவிலேயே செய்து கொள்ளலாம் என்று இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முடிந்தவரை முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் AI ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்யும்.
இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும்.
பழங்கால பொருட்கள்
நம்மிடம் இருந்து திருடப்பட்ட 100க்கும் மேற்பட்ட இந்தியாவின் பழங்கால பொருட்கள் சர்வதேச சந்தையை அடைந்துள்ளன. அவற்றை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அமெரிக்க அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மை 21 ஆம் நூற்றாண்டில் உலகையே சிறப்பாக மாற்றும். இந்த கூட்டுறவில் இந்தியா வம்சாவளியினர் அனைவரும் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். நான் இங்கிருந்து நேராக விமான நிலையத்திற்குப் புறப்படுகிறேன், உங்கள் அனைவரையும் சந்திப்பது உணவுக்குப் பிறகு இனிப்பை உண்பதுபோல் உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.