எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
1 min readM.B.B.S., B.D.S. You can apply for the course from tomorrow to 10th
26.6.2023
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. 2023-24 ஆண்டிற்கான மருத்துவ கலந்தாய்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்வி இயக்ககம் செய்து வருகிறது.
நீட் தேர்வு முடிவு வெளியாகி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு தயாராக உள்ள நிலையில் அதற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் பரிசீலனையில் உள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மருத்துவ கலந்தாய்வை மாநில அரசு தான் நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விண்ணப்பிக்கலாம்
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவேற்றத்தை நாளை (28-ந்தேதி) முதல் தொடங்கலாம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரி இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவம், பல் மருத்துவக்கல்லூரிகளுக்கான நிர்வாக ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ. இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆன்லைன் மூலம் நாளை காலை 10 மணிமுதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 10-ந்தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரி மூலம் 10,875 மருத்துவ இடங்கள் கிடைக்கின்றன. இதில் நிகர்நிலை பல்கலைக் கழக இடங்களை மத்திய அரசு நிரப்பிக்கொள்ளும். சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் என மொத்தம் 7 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அதன் பின்னர் கட்ஆப் மார்க் அடிப்படையில் கலந்தாய்விற்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.