கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
1 min readTamil Nadu government has decided to sell tomatoes at purchase price
26.7.2023
கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தக்காளி
தக்காளியின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கி கிலோ 100 ரூபாயை நெருங்கி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமான தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ ரூ.64 முதல் ரூ.68 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.
கொள்முதல் விலை…
இந்நிலையில், தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி, நடமாடும் காய்கறி அங்காடி மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.