May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தோருக்கு அரசு மனநல ஆலோசனை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

1 min read

Anbumani urges government to provide mental health counseling to those who lost money in online gambling

29.6.2023
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்ற தனியார் வங்கி ஊழியர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மாரிச்செல்வம் அதில் பணத்தை இழந்ததால் ரூ.25 லட்சம் கடனாளி ஆனதாகவும், அதில் ரூ.10 லட்சத்தை அடைத்த அவர், மீதமுள்ள கடனை அடைக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது மன உளைச்சலுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல. மாரிச்செல்வத்தின் தற்கொலையால் அவரது குடும்பம் ஆதரவற்று போயிருகிறது. தற்கொலை செய்வதற்கு மாறாக கடனில் இருந்து மீண்டு வர போராடியிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை கடனாளி ஆக்கியிருக்கிறது. 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தடை செய்யப்படும் வரை 49 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் பயனாக ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இனி எவரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவதோ, பணத்தை இழப்பதோ, தற்கொலை செய்து கொள்வதோ நிகழாது. அதேநேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்கெனவே பணத்தை இழந்தவர்கள் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தும், தற்கொலை எண்ணத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும். அதற்காக அவர்களுக்கு மனநல ஆலோசனைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.