செந்தில் பாலாஜி நீக்கம் விவகாரத்தில் கவர்னர் முடிவில் மாற்றம்
1 min readChange in Governor’s decision on Senthil Balaji’s removal
30.6.2023
அமித்ஷா தலையிட்டதால் செந்தில் பாலாஜி அமைச்சர் விவகாரத்தில் கவர்னர் முடிவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தற்போது அவரது காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக அவரது மனைவி மேகலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத மந்திரியாக நீடித்து வருகிறார். செந்தில் பாலாஜியிடம் இருந்த அமைச்சர் பொறுப்புகள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஒப்புக்கொள்ளவில்லை.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னர் ரவி கடிதம் மூலம் கூறி இருந்தார். ஆனால் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை.
நீக்கி உத்தரவு
இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு திடீரென அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக கவர்னர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 பக்க கடிதம் அனுப்பி இருந்தார்.
செந்தில் பாலாஜியை திடீரென அமைச்சரவையில் இருந்து கவர்னர் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கவர்னரின் அதிரடி நடவடிக்கை சர்ச்சையை உருவாக்கும் வகையில் மாறியது.
சட்ட நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியின் முடிவுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தனர். அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார்கள். அதோடு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட ஒரு தீர்ப்பையும் மேற்கொள் காட்டினார்கள். அந்த தீர்ப்பில், “கவர்னர் என்பவர் மாநில அமைச்சரவை பரிந்துரையின்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க மட்டுமே கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்” என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது. சட்ட நிபுணர்கள் ஒட்டு மொத்தமாக கவர்னருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு இந்த விவகாரத்தில் தலையிட்டார். அவர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது கவர்னருக்கு சில அறிவுறுத்தல்களை மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது.
கவர்னரிடம் அவர், “சட்ட ரீதியிலான முடிவுகள் செய்யும்போது அது அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும். கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் கலந்துபேசி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கவர்னர் ரவியிடம் மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திரும்பப்பெற்றார்
இதையடுத்து கவர்னர் ரவி தனது உத்தரவை திரும்ப பெற முடிவு செய்தார். 5 மணி நேரத்துக்குள் அவர் மீண்டும் ஒரு கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில் கவர்னர் ரவி கூறியிருப்பதாவது:-
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய எனது கடிதத்தை பார்த்து இருப்பீர்கள். இது தொடர்பாக மத்திய உள்மந்திரி என்னை தொடர்பு கொண்டு சில அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளார். அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) மூலம் இந்த விவகாரத்தில் கருத்துக்களை பெறும்படியும் என்னிடம் தெரிவித்துள்ளார். அதன்படி நான் அட்டர்னி ஜெனரலை நாடி உள்ளேன். அவரிடம் அமைச்சர் நீக்கம் குறித்து கருத்து கேட்டு உள்ளேன். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் எனது முடிவை அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 5 மணி நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம் முடிவுக்கு வந்தது.