தக்காளி விலையை கட்டுப்படுத்த யோசனைகள் தெரிவிக்கலாம்- மத்திய அரசு அறிவிப்பு
1 min readIdeas can be submitted to control the price of tomatoes- central government notification
1.7.2023
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் யோசனைகள் தெரிவிக்கும் போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தக்காளி
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பருவநிலை காரணமாக உற்பத்தி குறைந்ததும், சில மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புதுமையான யோசனைகளை தெரிவிக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
போட்டி
மேலும் இதுதொடர்பாக டெல்லியில் ‘தக்காளி கிராண்ட் சேலஞ்ச் கேக்கத்தான்’ போட்டி ஒன்றையும் நடத்த உள்ளதாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித்சிங் தெரிவித்துள்ளார். வெங்காயத்தின் விலை உயர்ந்தபோதும் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டது. அப்போது பொதுமக்களிடம் இருந்து 13 யோசனைகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போதும் அதுபோன்று பொதுமக்களின் கருத்துக்களை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக ரோகித்சிங் கூறியதாவது:-
நடவு மற்றும் அறுவடை பருவங்களின் சுழற்சி மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாறுபாடு ஆகியவவை தக்காளி விலை உயர்வுக்கு முதன்மையான காரணமாகின்றன. இதனால் தற்காலிகமாக விநியோகம் செய்வதிலும் சில இடையூறுகள் உள்ளன. இதுபோன்ற சில காரணங்கள் தான் தக்காளி விலை உயர்வுக்கு வழி வகுத்தது. எனவே இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடத்தப்படும் புதிய போட்டிகளில் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், ஆசிரியர்கள், தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப்புகள் மற்றும் தொழில் வல்லுனர்கள் பங்கேற்கலாம். நுகர்வோருக்கு மலிவு விலையில் தக்காளி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், விவசாயிகள் விளை பொருட்களுக்கான மதிப்பை பெறும் வகையிலும் யோசனைகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.