திருப்பதி கோவில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியாது- மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு
1 min readPlanes cannot be banned from flying over Tirupati Temple – Central Government has given a definite announcement
1.7.2023
திருப்பதி கோவில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்ட அறிவித்துள்ளது.
விமானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு என்று ஆகம விதிகள் உள்ளன. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆகம விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பதி மலைக்கு மது மாமிசம் புகைப்பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாற்று மதத்தினரின் அடையாளங்களைக் கொண்ட நபர்கள் மற்றும் அவரது வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.
மேலும் ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்கவும் தடை செய்யப்பட்ட பகுதியாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள் ராணுவ பயிற்சி ஹெலிகாப்டர்கள் பறந்து செல்லும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மறுப்பு
ஆனால் மத்திய அரசு தடை விதிக்கப்பட்ட பகுதியாக ஏழுமலையான் கோவிலை அறிவிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கடப்பாவில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டது.
இதனால் பெங்களூருவில் இருந்து வரும் விமானங்கள் திருப்பதிக்கு வந்து கடப்பா செல்லும்போது ஏழுமலையான் கோவில் மீது செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் ஒன்று 2 விமானங்கள் ஏழுமலையான் கோவில் மீது சென்று வருவதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.