November 5, 2024

Seithi Saral

Tamil News Channel

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா;- ரஞ்சிதா பரபரப்பு பேச்சு

1 min read

Kailasa is a safe place for women;- Ranjitha sensational speech

28.7.2023
பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா;- ரஞ்சிதா கூறினார்.

நித்யானந்தா

குஜராத், கர்நாடகாவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வழக்குகள் தொடர்பாக சாமியார் நித்யானந்தாவை போலீசார் தேடிய போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது.

அதோடு, அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகம் செய்ததோடு, அந்நாட்டில் குடியேற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்தார். சர்வதேச போலீசார் மூலம் புளூகார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு நித்யானந்தாவை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அவர் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பக்தர்களுடன் நேரலையில் சொற்பொழிவாற்றி வருகிறார்.

மேலும், கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் கிடைத்து விட்டதாக அவரது பக்தர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிய நிலையில், கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுக்கு பெண் தூதர்களையும் நித்யானந்தா அறிவித்து பரபரப்பை எகிறச் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மாநாடு கூட்டத்தில் கைலாசா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி விஜயப்ரியா நித்யானந்தா பேசிய பேச்சுகள் சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியது. இதைத்தொடர்ந்து நித்யானந்தா பிரதிநிதிகளின் கருத்துக்களை நிராகரிப்பதாக கூறி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விளக்கமளிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள முக்கிய 30 நகரங்களுடன் கைலாசா சார்பில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த நகரங்களின் மேயர்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர். இவ்வாறு தொடர்ந்து பின்னடைவை சந்தித்ததால் சற்று அமைதியாக இருந்த நித்யானந்தா தரப்பினர் கடந்த சில நாட்களாக மீண்டும் சமூக வலைதளங்களை பரபரப்பாக்கி வருகின்றனர். அந்தவகையில், நித்யானந்தாவின் தலைமை சீடர்களில் ஒருவராக இருந்த நடிகை ரஞ்சிதாவின் பெயர், கைலாசா நாட்டின் ‘லிங்க்டு இன்’ இணையதள பக்கத்தில் ‘மா நித்யானந்த மாயி சுவாமி’ என்றும், அவர் கைலாசா நாட்டின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ரஞ்சிதா கைலாசா நாட்டின் பிரதமராகி விட்டார், அவர் முக்கிய பொறுப்பில் இருந்து நாட்டை கவனித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை அதிகரிக்க செய்தன. அதேநேரம் எங்கே இருக்கிறது? என தெரியாத ஒரு நாட்டிற்கு அதிபர், பிரதமர் எல்லாம் அறிவிக்கப்படுகின்றனர் என்ற குரல்களும் சமூக வலைதளங்களில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, நித்யானந்தாவைத் தொடர்ந்து தற்போது ரஞ்சிதாவும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கி உள்ளார். அதன்படி, ரஞ்சிதா, கைலாசா சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில்கள் அளித்து பேசி வருகிறார். அவ்வாறு அவர் பேசிய வீடியோக்கள் யூ-டியூப்பில் வைரலாகி வருகிறது. கைலாசா என்றால் என்ன? என்பது பற்றியும், நித்யானந்தா பற்றியும் அவர் பேசிய பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ரஞ்சிதா பேசியதாவது:-

கைலாசம் பரமசிவம் பக்கம் நிற்கிறது. இந்துத்துவத்தின் புனிதத்தை ஒரு நெட்வொர்க்காக இணைக்கிறது கைலாசா. பூஜைகள், யோகா, சந்யாசம் உள்ளிட்ட அனைத்து இந்து நெறிமுகளையும் கைலாசா கற்றுத் தருகிறது. இது அசைக்க முடியாத அடித்தளத்தை கொண்டது. கைலாசா எப்போதும் தர்மாவின் பக்கம் நிற்கும், அதில் எந்த சமரசமும் செய்யாது. வேறு எந்த மிரட்டலுக்கும், சமரசத்திற்கும் கைலாசாவில் இடமில்லை. இந்த உலகம் இரு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒன்று ஏ.ஐ.டெக்னாலஜி (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்)-செயற்கை நுண்ணறிவு, மற்றொன்று சி.ஐ.(காஸ்மிக் இன்டெலிஜென்ஸ்)-அண்ட நுண்ணறிவு, அது தான் கைலாசா. இந்த உலகின் கேம் சேஞ்ஜராக சுவாமி நித்யானந்தா இருக்கிறார். கைலாசா, முதல் இந்து தேசம். இன்று இந்துக்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இந்துக்களுக்கான தேவைகள் கிடைப்பதில்லை. ஆனால், கைலாசாவில் வசிக்கும் இந்துக்களுக்கு முறையான தேவைகள் கிடைக்கிறது. நான் யார் என்கிற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், நீங்கள் வரவேண்டிய இடம் தான் கைலாசா. கைலாசாவில் எல்லாமே இலவசம். கல்வி இலவசமாக கிடைக்கிறது. சுவாமி நித்யானந்தர் அதில் உறுதியாக இருக்கிறார். விலங்குகளை கொலை செய்வதை அங்கு அனுமதிப்பதில்லை. அதனால் அசைவங்களுக்கு அனுமதியில்லை. சுவாமிஜியின் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்க்கையில், தர்மத்தின் பக்கம் அவர் நின்றிருக்கிறார். தொடர்ந்து தர்மத்தின் பக்கம் அவர் நிற்பார். காசி, மதுரை மீனாட்சி போன்ற புனிதமான இந்துக்களின் வரலாற்றை, இந்துக்களின் நினைவில் கொண்டு சேர்ப்பதும், போற்றி பாதுகாப்பதும் தான் சுவாமி நித்யானந்தாவின் பணி. 2009-ல் சுவாமி நித்யானந்தரை சந்தித்தேன். அவர் பார்த்ததும் புன்னகைத்தார். அவர் அனைவரிடமும் பேசினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருந்தார். பணம், பொருள் சம்பாதிக்கும் எந்த எண்ணமும், நோக்கமும் அங்கு இல்லை. பெண்கள் முன்னேற்றத்தில் கைலாசா எப்போதும் முன்னுரிமை தருகிறது. உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் தன்னுடைய பிரதிநிதியாக பெண்களை தான் கைலாசா அனுப்புகிறது. மற்ற எந்த நாடுகளும் இதை செய்வதில்லை. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று நித்யானந்தர் அறிவித்தார். ஆனால் இன்று கைலாசாவின் பொறுப்புகளில் 98 சதவீதம் பெண்கள், தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை கைலாசாவில் இருப்பதாக அங்கு வசிக்கும் பெண்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.