குற்றாலத்தில் சுற்றுலா பயணி வெட்டிக்கொலை
1 min readTourist hacked to death in Courtalam
29.7.2023
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதியில் சுற்றுலா பயணி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
குற்றாலத்தில்..
நெல்லை மாவட்டம் சின்ன மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவர் 3 பேருடன் நேற்று முன்தினம் இரவு குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார்.
குற்றாலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் 4 பேரும் அறை எடுத்து தங்கினர்.
நேற்று காலை முருகேசன் உள்பட 2 பேர் மசாஜ் செய்து வருவதாக கூறி விட்டு வெளியே சென்று உள்ளனர். பின்னர் திரும்பி வந்த அவர்கள், அறையில் இருந்த மற்ற 2 பேரையும் சாப்பாடு வாங்கி வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
அவர்கள் சாப்பாடு வாங்கிக் கொண்டு அறைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு முருகேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவருடன் இருந்தவரை காணவில்லை.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக தங்கும் விடுதி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி (குற்றாலம்), பாலமுருகன் (தென்காசி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனுடன் தங்கி இருந்தவரை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த வாலிபர், தங்கும் விடுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது