எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
1 min read
MP Rabindranath appealed in the Supreme Court against the cancellation of the post
30.7.2023
எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ரவீந்திரநாத்
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியைச் சேர்ந்த பவானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் வேட்பு மனுவில் உண்மையான விவரங்களை ரவீந்திரநாத் மறைத்து உள்ளார். வருமானத்தை மறைத்து தெரிவித்த நிலையிலும் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது சட்ட விரோதம். அதனால் அவரது வெற்றியை ரத்துசெய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 6-ந் தேதி பரபரப்பான உத்தரவை பிறப்பித்தது. ரவீந்திரநாத், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தையும், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பதையும் வேட்பு மனுவில் மறைத்துள்ளார். விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்தாக கூறிய நிலையில், வட்டி தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கிடைத்த வருமானத்தையும் அவர் மறைத்துள்ளார். ரூ.4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய்க்கு மட்டுமே சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் காட்டியுள்ளார்.
இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்று கூறினார். பணப்பட்டுவாடா மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் சாட்சியையும் மனுதாரர் மிலானி தரப்பில் கொண்டு வரவில்லை. சமூக வலை தளங்களில் பரவிய வீடியோ காட்சிகள் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அதனால் பணப்பட்டுவாடா செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான குற்ற வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதே வேளையில் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதால், அவர் தகவலை மறைத்தார் என்ற காரணத்தை கூறி அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என்கிற ரவீந்திரநாத் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே ஒ.பி.ரவீந்திரநாத்தின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது. அதனால் மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக் கொண்டு, ஒ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு
அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.