May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

1 min read

2 raiders shot dead in an encounter near Kuduvancheri

1.8.2023
சென்னை வண்டலூர் அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அருகே போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த போலீஸ் வேட்டை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-

வாகன சோதனை

தாம்பரம் புறநகர் பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தினமும் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலையிலும் போலீசாரின் வாகன சோதனை நீடித்தது.
அப்போது 3.30 மணியளவில் அந்த வழியாக ஸ்கோடா கார் ஒன்று வேகமாக வந்தது. மின்னல் வேகத்தில் வந்த காரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரில் இருந்தவர்கள் வேகத்தை குறைக்காமல் போலீசாரை இடித்து தள்ளுவதுபோல சென்றனர். போலீசிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் காரை ஓட்டி வந்தவர்கள் அதனை தாறுமாறாக இயக்கினார்கள். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பின்னர் அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி அதனை இடித்து தள்ளி நின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் காரை நோக்கி விரைந்து சென்றனர். அப்போது காரில் இருந்து 4 பேர் இறங்கினர். அவர்களில் 2 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சுட்டுக்கொலை

அவர்களின் கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரையும் மடக்கி பிடிக்க நினைத்து அருகில் சென்றனர். ஆயுதங்களை கீழே போடுங்கடா? என்று எச்சரித்துக் கொண்டே போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். ஆனால் ரவுடிகள் அதனை கேட்கவில்லை. அவர்களில் ஒருவன் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதனை அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டான். அவரது இடது கையில் முதலில் வெட்டிய அவன் பின்னர் தலையிலும் வெட்டினான். ஆனால் சிவகுருநாதன் குனிந்து கொண்டார். இதனால் தொப்பியில் வெட்டு விழுந்தது. ரவுடிகளின் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகேசன் இருவரும் தங்களது துப்பாக்கியை தூக்கினர். தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள இருவரும் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி, இன்னொரு ரவுடி ஆகிய இருவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் அலறி துடித்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.
உடனடியாக இருவரையும் ஆஸ்பத்திரிக்கு போலீசார் தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்து விட்டனர். போலீஸ் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட 2 ரவுடிகளும் பயங்கர ரவுடிகள் என்பது தெரியவந்தது. ஒருவனது பெயர் சோட்டா வினோத். இவனுக்கு 35 வயதாகிறது. இன்னொருவன் பெயர் ரமேஷ். இவனுக்கு வயது 32. இருவரும் ஓட்டேரி போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் நேற்று இரவு காரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போதுதான் வாகன சோதனையின்போது போலீசில் சிக்கி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
சிறுவயதிலேயே தவறான பழக்க வழக்கங்கள் காரணமாக சோட்டா வினோத்தும், ரமேசும் ரவுடிகளாக மாறி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். சோட்டா வினோத் ஏ-பிளஸ் ரவுடியாக வலம் வந்துள்ளான். ஓட்டேரி, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்த இவன் அப்பகுதியில் பெரிய தாதாவாக வலம் வந்துள்ளான். தொழில் அதிபர்கள் மற்றும் பெரிய நிறுவன உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, அடிதடியில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகளும், 15 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ரவுடியான இவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று 10 இடங்களில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கும், 15 இடங்களில் அடிதடியில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்திய வழக்கும் உள்ளது. இதுபோன்று 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சோட்டா வினோத் மீது உள்ளன. என்கவுண்டரில் பலியான இன்னொரு ரவுடியான ரமேஷ் ஏ-வகையை சேர்ந்த ரவுடி ஆவான். இவன் மீதும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வந்தது. இவன் மீது 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2 ரவுடிகளின் உடல்களும் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இன்னும் திருமணமாக வில்லை.
பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டேரி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரவுடிகள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதிகாலையில் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு 2 ரவுடிகள் இரையான சம்பவம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரவுடிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.