மணிப்பூர் விவகாரம்: பாராளுமன்ற இரு அவைகளும் 9வது நாளாக ஒத்தி வைப்பு
1 min readManipur issue: Both Houses of Parliament adjourn for 9th day
1.8.2023
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 9-வது நாளாக முடங்கின.
பாராளுமன்றம்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் மணிப்பூர் கலவரம் தொடர்பான அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. 8-வது நாளாக நேற்று பாராளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இரு அவைகளிலும் பதில் அளிக்க வேண்டும் என்று கோரி எதிர்கட்சிகள் அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகையுடன் முழக்கமிட்டனர்.
சிலர் மைய பகுதிக்கு வந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அரியானா கலவரம் தொடர்பான பிரச்சினையை பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் கிளப்பினார்கள். எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார். மேல் சபையிலும் மணிப்பூர் விவகாரத்தால் கடும் அமளி நிலவியது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 60 நோட்டீஸ் கொடுக்கப்பட்டன. அமளியில் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 9-வது நாளாக முடங்கின.