பட்டியல் இன மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 10,000 கோடி ரூபாயை திருப்பி அனுப்பியது
1 min read10,000 crore given by the central government for scheduled caste people was returned
31.7.2023
மத்திய அரசு வழங்கிய பட்டியலின சமுதாயத்தினர் நல நிதி சுமார் 10,000 கோடி ரூபாயை தி.மு.க. அரசு திருப்பி அனுப்பியதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு நிதி
ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையை, பட்டியலின சமுதாய மக்களின் நலனுக்காகச் செலவிடாமல் திருப்பி அனுப்புவது திறனற்ற திமுக அரசின் வழக்கம். பட்டியலின சமுதாயத்தினருக்கன பள்ளிகள் மற்றும் விடுதிகளை மேம்படுத்துதல், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு போன்றவை எதுவுமே நிறைவேற்றாமல், சென்ற ஆண்டு மத்திய அரசு வழங்கிய பட்டியலின சமுதாயத்தினர் நல நிதி சுமார் 10,000 கோடி ரூபாயை திருப்பி அனுப்பியது திமுக. ஆனால், தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக புதியதாக நிதி எதுவும் ஒதுக்காமல், பட்டியலின சமுதாயத்தினர் நல நிதியை மடைமாற்ற முயற்சித்தால், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மடைமாற்றம்
பட்டியலின நல நிதியை, பட்டியலின சமுதாய மக்கள் நலனுக்காக மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து, பின்னர் தகுதி உடைய மகளிருக்கு மட்டும் என்று ஏமாற்றிய கூட்டம், தற்போது பட்டியலின சமுதாயத்தினர் நல நிதியை மடைமாற்ற முயற்சிப்பது என்பது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, பிறர் மேல் பழி சொல்லி கைவிட்டுவிட்டு, தமிழக சகோதரிகளை முழுமையாக ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்தில்தான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
உடனடியாக, இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நல நிதியை, அதற்கான நோக்கத்தில் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும், அதைக் காரணமாகச் சொல்லி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கைவிடும் எண்ணம் இருந்தால், தமிழக சகோதரிகள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி எடுக்கப்படுகிறதா?” என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.