குற்றாலம் அருகே பஸ் மீது கல் வீச்சு 3 பேருக்கு 3 ஆண்டு சிறை
1 min read
3 years in jail for pelting stones on a bus near Courtalam
5.8.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு ராயர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-1-2023 அன்று இவர் தென்காசி பழைய பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தியிருந்தார்.
அப்போது அங்கு வந்த தென்காசியை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் அன்வர் (வயது 38), தர்மராஜ் மகன் டேவிட் ராஜா ( வயது 41), சுடலையாண்டி மகன் அய்யப்பன் (வயது 29) ஆகியோர் ரகளையில் ஈடுபட்டு அந்த தனியார் பஸ்சை கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர் முருகன் தென்காசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன்படி தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை மாஜிஸ்திரேட்டு பொன்பாண்டி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அன்வர் உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.