தென்காசி அருகே கிணற்றுக்குள் சாக்கு மூட்டையில் இளம் பெண் உடல்
1 min read
Body of young woman in sack in well near Tenkasi
11.8.2023
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாக்குமூட்டையில் பிணம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அங்குள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகில் பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு உள்ளது.
அந்த பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கிணற்றுக்குள் பார்த்தார். தண்ணீரில் ஒரு சாக்குமூட்டை கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.
இதுகுறித்து அவர் உடனடியாக தலையாரி ஆரோக்கியசாமி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மேலும், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார்கள். தண்ணீரில் மிதந்த சாக்குமூட்டையில் கால்கள் வெளியே தெரிந்தது. உடனடியாக சாக்குமூட்டையை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.
அதை போலீசார் அவிழ்த்து பார்த்தபோது, அதில் இளம்பெண் உடல் அழுகிய நிலையில் இருந்தது. பிணத்தின் வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் ‘இதயம்’ படமும் பச்சைகுத்தப்பட்டு இருந்தது.
பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ஒரு சாக்குமூட்டையை கிணற்றில் போட்டுச் சென்றுள்ளனர். எனவே, அவர்கள் தான் இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் தென்காசி மாவட்டத்தில் மாயமான இளம்பெண்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார்