சந்திராயன்-3 விண்கலத்தை சமவெளியில் நிறுத்த முயற்சி: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
1 min read
Attempt to land Chandrayaan-3 spacecraft on plains: Scientist Mylaswamy Annadurai interviewed
22.8.2023
சந்திராயன்-3 விண்கலத்தை சமவெளியில் நிறுத்த முயற்சி நடப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
மயில்சாமி அண்ணாதுரை
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக வேலை பார்த்தார். அப்போது அவர் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார். தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ளது. இந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சவால்
ரஷியா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தரையிறங்க முடியாமல் நொறுங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி தரலாம். சர்வதேச விண்வெளி துறையில் மிகுந்த அனுபவம் உடைய தேசம் எப்படி தோல்வியை தழுவியது என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது.
சந்திரயான்-2 விண்கலத்துக்கு ஏற்பட்ட அதேகதி தான், லூனா-25 விண்கலத்துக்கு ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம். அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். நிலவின் சமவெளி பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போல இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அங்கு விண்கலத்தை தரையிறக்கும் போது கரடுமுரடான இடங்களில் சிக்கி அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உண்டு.
ரஷியாவின் லூனா-25 விண்கலத்துக்கு அந்நிலையில் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நாட்டின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் கானல் நீரானது மிகவும் வருத்தம் தருகிறது. நாம் இதுவரை பார்த்திராத இடத்தில், ஒரு சவாலான காரியத்தை மேற்கொள்ளப் போகிறோம்.
வேகம் குறைப்பு
லூனா-25 விண்கலத்தின் வேகத்தை குறைக்கும்போது ரஷியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் நாம் சந்திரயான்-3 விண்கலத்தின் வேகத்தை 2 நாட்களுக்கு முன்பே குறைத்து வெற்றிகரமாக இயக்கி வருகிறோம். சந்திரயான்-2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் உடன், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது வரை நடப்பது எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உலக நாடுகளிடம் சந்திரயான்-3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.