கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் தீ்ர்ப்பு
1 min read
Court Can’t Intervene in Khacha Island Rescue Issue: High Court Verdict
31.9.2023
கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு
சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2013-ல் 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கவும், 1974-ம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, ”கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு முடித்து வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.