கருணை மனு மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது- மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர முடிவு
1 min read
The President’s decision on the mercy petition is final – Central Government decides to bring a new law
31.8.2023
மரண தண்டனைக்கு எதிரான
கருணை மனு மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது என்ற ஒன்றிய அரசு புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
கருணை மனு
மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகள் அதில் இருந்து தப்பிக்க தண்டனையை குறைத்து கொள்வதற்காக நீதிமன்றங்களை நாடுவார்கள். கோர்ட்டு அதை நிராகரிக்கும் போது ஜனாதிபதிக்கு கருணை மனுவை தாக்கல் செய்வார்கள். தண்டனையை நிறுத்துவதற்கும் அல்லது மாற்றுவதற்கும், மன்னிப்பு, தளர்வு, அவகாசம் வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்படும் போது மீண்டும் கோர்ட்டுக்கு சென்று சீராய்வு மனு தாக்கல் செய்வார்கள். இந்நிலையில் மரண தண்டனை கைதிகளின் கருணை மனு மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவே இறுதியானது. அதற்கு மேல் முறையீடு கிடையாது என்று புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதாவின் (பி.என்.எஸ்.எஸ்) படி ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீடுகளை தடுக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 72-வது பிரிவின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக எந்த நீதி மன்றத்திலும் மேல் முறையீடு செய்யக்கூடாது இது இறுதியானது. மேலும் ஜனாதிபதியின் முடிவை பற்றி எந்தவொரு கேள்வியும், எந்த கோர்ட்டுகளிலும் விசாரிக்கப்படாது என்று புதிய சட்ட மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அல்லது கவர்னரின் முடிவு கால தாமதம் என காரணம் காட்டி மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது இந்த மனுக்களை விசாரிக்க உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து இருந்தது.
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான யாகூப் மேமன் மரண தண்டனை வழக்கிலும், நிர்பயா கொலை வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டில் நள்ளிரவு கடந்தும் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.