May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 நாளை விண்ணில் பாய்கிறது

1 min read

Aditya L-1 will launch tomorrow to study the Sun

1.9.2023
விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, நாளை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “சூரியன் – பூமி அமைப்பில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1 (எல் 1)-ஐ சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் ஆய்வகம் வைக்கப்படும் என்றும், இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தடையின்றி தொடர்ந்து சூரியனைப் பார்க்கும் வகையில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதால், அது சூரியன் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும்.

“எல் 1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆய்வகம் வைக்கப்படுவதால் எந்த தடையும் இல்லாமல் சூரியனைத் தொடர்ந்து பார்க்கும் முக்கிய நன்மை கிடைக்கும். சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க ஏழு பேலோடுகளை விண்கலம் சுமந்து செல்கிறது. நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள், லாக்ரேஞ்ச் புள்ளி L1 இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ, சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ், சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ், கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.

உள்நாட்டு முயற்சி

ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், இன்று விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.