September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

“ஒரே நாடு ஒரே தேர்தல்”- ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு

1 min read

“One Nation One Election”- Committee headed by former President Ram Nath Kovind to study

1.9.2023
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களுக்கு இது தொடர்பான விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

வரவிருக்கும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனையொட்டியே அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலுக்கு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும். வாக்குப்பதிவும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

கடந்த 9 ஆண்டுகளில் இதுபோன்று சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். முன்னதாக, கடந்த 2017 ஜூன் 30-ல் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு ஜிஎஸ்டி சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்படுதற்கு முதல் காரணமாக செலவினக் குறைப்பு உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. இது அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களையும் உள்ளடக்கியதாகும்.
இந்நிலையில் ஒரே நேரத்தில் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தலை நடத்தினால் செலவுகள் குறையும் என்று இதனை ஆதரிக்கும் தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தினால் தங்களால் செலவுகள் அடிப்படையில் தேசிய கட்சியை எதிர்கொள்ள முடியாது என்பதே பிராந்திய கட்சிகளின் முக்கிய வாதமாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி அவ்வாறு ஒரே தேர்தல் நடத்தும்போது உள்ளூர் பிரச்சினைகள் கவனம் பெறாமல் போய்விடும் என்றும் பிராந்தியக் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி கூறியதாவது:-
முன்னாள் குடியரசு தலைவர் ஒருவரை ஒரு கமிட்டியின் தலைவராக அரசு நியமிப்பதை இப்போதுதான் நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்திருக்கலாம்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டு திறக்காமல், பிரதமரைக் கொண்டு திறந்ததன் மூலம், குடியரசுத் தலைவர் பதவிக்கு இருக்கும் கண்ணியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்து மரபை மீறியுள்ளனர். இதன் மூலம் தவறான பாரம்பரியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், “குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர்களை, வேறு பொறுப்புகளில் நியமிக்கும் மரபு இதுவரை இருந்தது இல்லை. மரபை மீறி ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தவறானது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்து முதலில் விவாதம் நடைபெற வேண்டும். அதன் பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.