திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்
1 min readAnother leopard on the move in Tirupati
1.9.2023
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
சிறுத்தை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் தந்தையுடன் சென்ற சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி தூக்கி சென்றது. அதனை சிறுவனின் தந்தை மற்றும் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவரும் விடாமல் விரட்டி சென்றதால் சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்று விட்டது.
கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் பெற்றோரை விட்டு முன்னால் வேகமாக ஓடிய 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை தொடர்ந்து அலிபிரி நடைபாதையில் பல்வேறு இடங்களில் சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டன.
இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்தி வன உயிரின பூங்காவில் பராமரித்து வருகின்றனர். மலைப்பாதையில் சுற்றித்திரிந்த சிறுத்தைகள் அனைத்தும் பிடிக்கப்பட்டு விட்டன. பக்தர்கள் அச்சமின்றி கோவிலுக்கு வரலாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நடைபாதையில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஒன்று
இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுமி சிறுத்தையால் தாக்கி கொல்லப்பட்ட பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடியது. இந்த சிறுத்தை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இதனை கண்டு தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தையை பிடிக்க மேலும் அந்த பகுதியில் கூடுதலாக கூண்டு வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் நடைபாதை பகுதியில் நடமாடிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. சிறுத்தைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.