நிகழ்ச்சி நிரல் முழுவதும் இந்தியில்..: கொதிப்புடன் கிழித்தெறிந்த திருச்சி சிவா
1 min readFull program in Hindi..: Trichy Siva torn with anger
18.9.2023-
இந்திய பாராளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும், அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரவும், ஆளும் பா.ஜ.க.வால் நேற்றுமுன்தினம் ஒரு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். இதனையொட்டி, காலை பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் “கஜ துவார்” பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் தலைமை வகித்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். தி.மு.க.வின் சார்பில் மாநிலங்களவைக்கு 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நிகழ்ச்சி நிரல் அவருக்கு வழங்கப்பட்டது. அதில் உள்ளடக்கம் முழுவதும் இந்தியிலேயே இருந்தது. இதனை எதிர்த்த சிவா, இந்நிகழ்ச்சி நிரலை கிழித்து எறிந்துவிட்டார்.
அவரை போலவே பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ராஜ்நாத் சிங், எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் உள்ளடக்கம் இடம் பெறும் என உத்தரவாதம் அளித்தார். பாராளுமன்றம் கூட்டப்பட்டிருப்பதன் அவசியம் குறித்து பேசிய திருச்சி சிவா, “பா.ஜ.க.வினர் எதையோ மறைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அது என்னவென்று தெரிய வேண்டும். அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த சூழ்நிலை இதற்கு முன் என் அரசியல் வாழ்வில் நான் பார்த்ததில்லை, என தெரிவித்தார்.