காவிரியில் தண்ணீர் இல்லை, வறட்சி என கர்நாடகா பொய்யான காரணம் கூறுகிறது அமைச்சர் துரைமுருகன் பேட்டி
1 min readKarnataka Minister Duraimurugan gives false excuse of lack of water in Cauvery and drought
18.9.2023
காவிரியில் தண்ணீர் இல்லை, வறட்சி என கர்நாடகா பொய்யான காரணம் கூறுவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அமைச்சர் துரைமுருகன்
காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிப்பதாக இருந்தது. இதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உத்தரவு
காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக அரசை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக 5,000 கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசுதான் அமைத்தது. எனவே இப்போது மத்திய அரசிடம் முறையிட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு டெல்லி செல்கிறது.
காவிரி தண்ணீர் விவகாரத்தில், கர்நாடகா மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் தயவை நாடிதான், கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. இது நியாயமானது அல்ல என்பது என் கருத்து. கர்நாடகா காவிரியில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறது. நாம் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விட்டு, அங்கு தண்ணீர் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும்படி கூறியிருக்கிறார்கள்.
பொய்
எனவே கர்நாடகா தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்று பொய்யான காரணத்தை கூறுகிறது.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதே விமானத்தில் இந்தக் குழுவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் சென்றார். இந்தகுழுவில் உள்ள மற்ற எம்பிக்கள் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.
இந்நிலையில், காவிரி விகாரம் தொடர்பாக இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.