திருப்பதியில் பிரமோற்சவ விழா தொடங்கியது
1 min readThe inauguration ceremony started in Tirupati
18.9.2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை அங்கூரார்பணம் நடந்தது. விஷ்வகேஸ்வரர் சுவாமி மாட வீதிகளில் உலா வந்து திருவிழா ஏற்பாடுகளை பார்த்தபடி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை ஒட்டி ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை இன்று மாலை சமர்ப்பித்தார்.
திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரவு 9 மணிக்கு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் கம்புகளை எடுத்துச் செல்கின்றனர். மேலும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
திருப்பதியில் நேற்று 77,441 பேர் தரிசனம் செய்தனர். 29,816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.