அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 7வது முறையாக நீட்டிப்பு
1 min readCourt custody of Minister Senthil Balaji extended for 7th time
29.9.2023
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 7-வது முறையாகும்.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இந்த விசாரணை முடிந்து, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இதைத் தொடர்ந்து அவரது காவலை ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக.28-ம் தேதி, செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சிறைத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில்,உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இன்றுடன்…
இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7-வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.