May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சொரிமுத்து அய்யனார்கோவிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களையே அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

1 min read

Limited number of devotees to be allowed in Sorimuthu Ayyanar temple: High Court orders

29.9.2023
சொரிமுத்து அய்யனார்கோவிலுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களையே அனுமதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த சாவித்ரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சொரிமுத்து அய்யனார் கோவில்

நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கும் காரையார் அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் முண்டந்துறை காப்புக்காட்டில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். இந்தக் கோயிலுக்கு நெல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.

ஆடி அமாவாசை திருவிழா 15 நாள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் கோயில் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருப்பார்கள். இந்த பக்தர்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுச் செல்கின்றனர். கூடாரங்கள் அமைத்தல், உணவு சமைத்தல் பணியின்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

இதனால், பல்லுயிர் சூழலியல் தலமாக விளங்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பாகத்தில் வாழும் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இரவு முழுவதும் அதிக சக்தி வாய்ந்த ஒளி விளக்குகளை எரியவிடுவதால் வன விலங்குகள் அச்சத்தில் உள்ளன. எனவே, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குறிப்பிட்ட அளவில் மட்டும் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

மனிதர்கள் மற்றும் வாகன நடமாட்டத்தால் புலிகள் காப்பகத்தில் புலிகளை காண்பதே அரிதாக உள்ளது. அதிக ஒளி உமிழும் விளக்குகளால் பல்லுயிர் தலத்தில் சூழல் மாறுபாடு ஏற்பட்டு வனவிலங்குகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன.
சாமி தரிசனத்துக்கு வருவோர்கள் ஏதோ பிக்னிக் ஸ்பாட்டுக்கு வருவது போல் முண்டந்துறை புலிகள் காப்பகத்தை மாற்றியுள்ளனர். முன்பு தீ பந்தத்தை ஏந்தி கோயிலுக்கு செல்லும் போது வனவிலங்ககள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
ஆகஸ்ட் மாத திருவிழாவில் நீதிமன்றம் அனுமதித்ததை விட அதிகளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு திருவிழாவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.