வாக்காளர்களை கவர தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
1 min read
Annamalai instructions to volunteers to attract voters
6.10.2023
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்கப்பட்ட பா.ஜனதா கட்சி தமிழகத்தில் புதிய அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மாற பா.ஜனதா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை மூலம் செல்வாக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். மேலும் தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மக்களை கவர்ந்திழுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார். குறிப்பாக மகளிர் ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பணம் கிடைக்காத பெண்களிடம் பேசி அவர்களது ஆதரவை பா.ஜனதா பக்கம் திருப்ப வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 80 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கவில்லை. அந்த 80லட்சம் பெண்களிடமும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேச வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுதவிர வரும் நாட்களில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு திராவிட கட்சிகளுக்கும் எதிராக அதிக அளவு குற்றச்சாட்டுக்களை வெளியிடவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாக அந்த நிர்வாகி குறிப்பிட்டார்.