June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆசிய விளையாட்டில் பதக்கத்தில் சதமடித்த இந்தியா-மோடி பாராட்டு

1 min read

India-Modi lauded for century of Asian Games medals

8.10.2023
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. 100 பதக்கங்களை வாங்கி குவித்து, வரலாற்று சாதனை படைத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப்போட்டி

சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப்போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. கடைசியாக ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து, 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் 25-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி வரும் கடந்த (செப்டம்பர் மாதம்) 23-ந் தேதி சீனாவின் ஹாங்சோவில் தொடங்கியது. அக்டோபர் 8-ந் தேதி(இன்று) வரை போட்டிகள் நடக்கிறது. மொத்தம் 40 விளையாட்டுக்கள் 482 பிரிவில் நடைபெற்று வருகிறது.
இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் 800 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் கபடிப் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிள் கபடி அணி தங்கம் வென்றது.
இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 524 பேர் கொண்ட இந்திய அணி 36 விளையாட்டுகளில் பங்கேற்றது. அதில் 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை பெற்று இந்தியா 8-வது இடத்தை பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பாராட்டு

இப்போது இந்தியா 100 பதக்கங்களை பெற்றது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது. வரும் 10ம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *