July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் வேகமாக பரவும் புரூசெல்லோசிஸ் நோய்- பாலை நன்றாக காய்ச்சி பயன்படுத்த அறிவுறுத்தல்

1 min read

Brucellosis is spreading rapidly in Kerala- instructions to use well-boiled milk

12.10.2023
கேரளாவில் வேகமாக புரூசெல்லோசிஸ் நோய் பரவி வருகிறது. இதனால் பாலை நன்றாக காய்ச்சி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நோய்

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே, அடுத்தடுத்து பல்வேறு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எலி காய்ச்சல், டெங்கு என பல்வேறு வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த மாதம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலியான சம்பவம் கேரளா மாநிலத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. பின்பு அங்கு மேற்கொள்ளப்பட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக நிபா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் கேரளாவில் புரூசெல்லோசிஸ் நோய் பரவி வருகிறது. திருவனந்தபுரம் வட்டப்பாறை பகுதியை சேர்ந்த ஜோஸ் மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் புரூசெல்லோசிஸ் நோய் பாதித்துள்ளது. அவர்கள் இருவரும் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பசுமாடுகள்

ஜோஸ் தனது வீட்டில் பசு மாடுகள் வளர்த்து வருகிறார். அதன் மூலமாக தந்தை-மகன் இருவருக்கும் புரூசெல்லோசிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நோய் கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் என்பதால் பாலை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கேரள மாநில கால்நடைத்துறை மந்திரி சிஞ்சு ராணி கூறியிருப்பதாவது:-

புரூசெல்லோசிஸ் நோய் கால்நடைகள், ஆடுகள், பன்றிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாகும். வெம்பாயம் பஞ்சாயத்தில் நோய் பரவியதை தொடர்ந்து, அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பஞ்சாயத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
அந்த பகுதியில் பசுக்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நோய்க்கு கால்நடைகளிடம் தனி அறிகுறிகள் எதுவும் தென்படாது. கர்ப்ப சிதைவு மட்டுமே இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

கால்நடைகளின் கர்ப்பம் கலைந்து வெளியேறும் திரவம் உள்ளிட்டவைகள் மூலமாக புரூசெல்லோசிஸ் நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. கரு கலைந்த கால்நடைகளின் திரவங்களை அகற்றும் சமயங்களில் கையுறைகள் அணிந்துகொண்டால் கிருமி பரவாமல் ஓரளவுக்கு தடுக்கலாம்.

மேலும் அந்த கழிவுகளை ஆழமான குழி தோண்டி அதில் போட்டு சிமெண்டு கலவையால் மூடிவிட வேண்டும். கால்நடைகளின் பால் மூலமாகவும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவும். ஆகவே பாலை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்க்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மேலும் தனிநபர் சுகாதாரமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.