தென்காசி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்
1 min read
Traditional paddy seeds at 50 per cent subsidy in Tenkasi district
13.10.2023
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியுள்ள தாவது:-
தென்காசி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுணி, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.25-க்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த விதை அளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.