July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

1 min read

No legal recognition of same-sex marriage- Supreme Court verdict

17.10.2023
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஒரே பாலினம் திருமணம்

ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இயற்கைக்கு மாறாக திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களுக்கான உரிமைகள் தொடர்பாகவும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தை இந்தியாவில் வெறுப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆனாலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் உறவுகள் தவறு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு

இந்த நிலையில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க கோரி நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டே இனி விசாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகள் கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

அப்போது ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்குகள் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஏப்ரல் 18-ந்தேதி முதல் 10 நாட்கள் தொடர்ச்சியாக விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் 17-ந் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீர்ப்பு

அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹூமா கோக்லி, நரசிம்மா ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள். இதில் 3 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினார்கள்.
“ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. எனவே ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை” என்று 3 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

மற்ற 2 நீதிபதிகளும் வேறு விதமான தீர்ப்பை வழங்கினார்கள். இதையடுத்து 3:2 என்ற விகிதத்தில் சட்ட அங்கீகாரம் இல்லை என்பது இறுதி தீர்ப்பாக வெளியானது. ஒவ்வொரு நீதிபதியும் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

தலைமை நீதிபதி சந்திர சூட் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

மறு ஆய்வு

நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் ஷரத்துக்களை கையாள முடியும். 200 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இப்போது ஏற்கக் கூடியதாக மாறி இருக்கிறது.
சதி, குழந்தை திருமணங்கள் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள். இன்று மறுக்கப்படுகின்றன. ஒரே பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது.
ஒரே பாலின விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது.
திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க பாராளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால் நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்.

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பது போன்றது. அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது.

ஒரே பாலின ஜோடிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை. குழந்தை தத்தெடுப்பு ஒழுங்கு முறை தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையில் ஒரே பாலினத்தவரை தவிர்த்தது அரசியலமைப்புக்கு எதிரானது.

விழிப்புணர்வு

ஒரே பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒரே பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் பாகுபாடு காட்டக் கூடாது. ஒரே பாலின நபர்களை, பிறந்த குடும்பத்துக்கு திரும்புமாறு போலீசார் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரே பாலின ஜோடிகள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.

திருமணம் செய்யாத ஜோடிகள், ஒரே பாலின ஜோடிகள் குழந்தையை தத்தெடுக்க முடியும்.

ஒரே பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அளித்த தீர்ப்பில், “வழக்கமான திருமண முறை, ஒரே பாலின திருமண முறையை நாணயத்தின் இரு பக்கங்களாக பார்க்க வேண்டும். ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிப்பது என்பது ஒரு முன்னோக்கிய நகர்வாகும்” என்றார்.

தொடர்ந்து ஒவ்வொரு நீதிபதிகளும் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.