May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்ட குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

1 min read

Death toll rises to 3 in Kerala Christian prayer meeting blast

30.10.2023
கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

குண்டு வெடிப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள் ஜெபக்கூட்டம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதன் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் எர்ணாகுளம், ஆலுவா, அங்கமாலி, எடப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2,300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு மையத்தில் காலை 9.45 மணி அளவில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் மொத்த அரங்கமே அதிர்ந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். பெண்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினர்.

தீப்பிடித்தது

உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு வெளியே ஓடியதால் அரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கே பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்த சில வினாடிகளிலேயே அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. இதனால் 2 இடங்களில் தீ பிடித்தது. இதில் அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் பற்றி எரிந்தன.
குண்டு வெடிப்பில் சிக்கியும், தீயில் சிக்கியும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆடைகளில் தீ பிடித்து எரிந்ததால் மக்கள் தரையில் படுத்து உருண்டனர். அதேநேரம் சிலரது உடலில் தீ பற்றிக்கொண்டதால் அணைக்க முடியாமல் திணறினர். இதைப்பார்த்த சிலர் அவர்களை மீட்க போராடினர்.

அடுத்தடுத்து வெடித்த இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி லிபினா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மேலும் 51 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்த குமாரி (வயது 53) என்ற பெண் பின்னர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக களமச்சேரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் ஒரு குழந்தை உள்பட 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் 95 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.