June 1, 2024

Seithi Saral

Tamil News Channel

பரவலாக மழை: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

1 min read

Widespread rain: Tourists are allowed to bathe as flood levels recede in curtrallam

30.10.2023
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் சேர்வலாறில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

குற்றாலம்

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக ஆய்குடியில் 36 மில்லிமீட்டரும், தென்காசியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது. கடனா அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கொடுமுடியாறு மற்றும் அடவிநயினார் அணைகளில் லேசான சாரல் பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

இதேபோல் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், எட்டயபுரம், காடல்குடி, சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இரவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.