நடிகை திரிஷா பற்றி தவறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
1 min readA case has been filed against actor Mansoor Alikhan for speaking ill of actress Trisha
20.11.2023
நடிகை திரிஷா பற்றி தவறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மன்சூர்அலிகான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், திரிஷா குறித்து ஆபாசமாக பேசினார். மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சின் வீடியோ இணையத்தில் வைரலானது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து, மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகர் மன்சூர் அலிகான், “உண்மையில திரிஷாவை உயர்வாத்தான் சொல்லிருப்பேன். திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ., எம்.பி., மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா..” என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டப்பிரிவு 509 மற்றும் இது தொடர்பான இதர பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்சூர் அலிகானுக்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்திய பேச்சு எமது சங்கத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.