”தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்”: வானிலை மையம் எச்சரிக்கை
1 min read
“Rain will continue for 3 days in Tamil Nadu”: Meteorological Department warns
23.11.2023
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறினார்.
மேலும், அவர் கூறும்போது, ”கடந்த 24 மணி நேரத்தில் 2 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. 8 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது” என்றார்.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையும் இன்று (நவ.23) பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(நவ.,24) கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.