சென்னைக்குப் பிறகு ஆந்திராவில் மிச்ஜால் புயல் கோரத்தாண்டவம்: 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பு
1 min readAfter Chennai, Cyclone Michelle in Andhra Pradesh: Severe impact in 8 districts
5.12.2023
மிச்சாய் புயல் ஆந்திர மாநிலம் சீராலா- பாபட்லா இடையே கரையை கடக்க இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கோண சீமா, உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் காலை முதலே 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
புயல் காற்றுடன் கனமழை பெய்ததால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது.
வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்காக 10-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 300 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கிருஷ்ணா மாவட்டத்தில் காற்று வீசியதால் கடலில் 10 அடி உயரத்திற்கு மேல் அலை எழும்பி கடலோரங்களில் இருந்த மீனவர்களின் வீடுகளில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது.
கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 63 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த 11 ஆயிரத்து 876 மீனவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 110 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதம் அடைந்தன.
பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லூர், விஜயவாடா நகராட்சி பகுதிகளிலும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பதி
ஆந்திர மாநிலம், திருப்பதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் காற்று வீசியதால் திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு சென்று உடனடியாக மரங்களை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர். இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பாபவிநாசம், கபில தீர்த்தம், ஜபாலி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர் மழை காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீரென நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு உள்ளது. கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் கபில தீர்த்தம் நீர்வீழ்ச்சியில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் சாலைகள் முழுவதும் தண்ணீர் ஓடுவதால் நேற்று தரிசனத்திற்கு வந்த திருப்பதியை சேர்ந்த விஜயகுமார் என்ற பக்தர் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் விஜயகுமாரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் குளிரில் அவதி அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை அருகே உள்ள கோகுல் கிருஷ்ணா என்ஜினியரிங் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்துக்கு வெள்ளநீர் செல்கிறது. மேலும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள கலங்கிய ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வெள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக சென்னை- நெல்லூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் சாலையில் இருபுறமும் நின்று வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது.
அனைத்து வாகனங்களும் சூலூர்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து திருப்பி விடப்பட்டன.
தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள பல ஓடைகள் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை மூழ்கடித்தன. பல இடங்களில் தாழ்வான பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை-நெல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.
இந்த வழியாக யாரும் பயணம் செய்ய வேண்டாம் என திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.