மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழப்பு
1 min read13 people lost their lives in resurgence of violence in Manipur state
5.12.2023
மணிப்பூரில் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் உயிரிழந்தனர்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் மெய்தி, குக்கி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்ததாக மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர். இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மணிப்பூர் போலீசார் வெளியிட்டுள்ள பதிவில், ” 4.12.2023 அன்று தெங்னவுபால் மாவட்டத்தில் உள்ள சைபால் அருகே லெய்தாவோ கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்து உள்ளனர்.